ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் விளைவிக்கக்கூடிய ஏலம், காபி, தேயிலை உள்ளிட்ட நறுமணப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதுதான், மதுரை – போடி ரயில் பாதை வழித்தடம்.
ஆரம்பத்தில் சரக்கு ரயிலாக தொடங்கப்பட்ட இந்த வழித்தடம் பின்னர், மீட்டர் கேஜ் ரயிலாக மாற்றப்பட்டு பயணிகள் சேவையுடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து அகல ரயில் பாதையாக தரம் உயர்த்துவதற்காக மதுரை – போடி ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
நிதிப்பற்றாக்குறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்டமாக மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையிலான அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்து 43 கி.மீ. ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து உசிலம்பட்டி – போடி வரையிலான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் நடைபெற்றுவரும் அகல ரயில் பாதைப் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கணவாய்ப் பகுதி, பாறையிலிருந்து ஏற்படும் நீர் கசிவு, வெளியேற்றப்படும் வடிகால் மற்றும் ரயில் தண்டவாளங்கள் உள்ளிட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே துறை அலுவலர்களிடம் பணியின் விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத் குமார், 'நாடாளுமன்ற கூட்டத்தில் போதிய நிதி இல்லாமல் நீண்டகாலமாக நடைபெற்று வரும் மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினேன். இதன் காரணமாக முதற்கட்டமாக 50 கோடி ரூபாயும், இரண்டாவது கட்டமாக 75 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வந்தது. கரோனா காலத்தில் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக ரயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறு மாதத்தில் மதுரையில் இருந்து தேனி வரையிலான ரயில் சேவை தொடங்கும்' என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் தென்னக ரயில்வே மதுரை மண்டல உதவி கோட்ட மேலாளர் லலித் குமார் மன்சுஹானி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.