தேனி: தேனி மாவட்டத்தில், டொம்புச்சேரி மற்றும் ராஜதானி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பொதுச் சுகாதார கட்டடம் மற்றும் துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறியதாவது,“தேனி மாவட்டம், போடி தொகுதிக்கு உட்பட்ட டொம்புச்சேரி, ஜங்கால்பட்டி, கொட்டக்குடி மற்றும் ராஜதானி, ஹைவேலிஸ் ஆகிய பகுதிகளில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிதாகத் துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப பொதுச் சுகாதார கட்டடங்களும், செவிலியர் குடியிருப்புக்கான கட்டடங்கள் என 5 கட்டடங்களைத் திறந்து வைத்துள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துவ கட்டடத்தைத் திறந்து வைத்தனர். அந்த கட்டடம் இன்றைக்குப் பெரிய அளவில், சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற பல்வேறு இந்திய மருத்துவ முறைகளுக்குத் தேவையான கட்டடமாக விளங்குகிறது. மருத்துவம் சிறப்பாக அளிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தேனி மாவட்டத்திற்கு 6 நகர்ப்புற நல வாழ்வு மையம் அமையும் என அறிவிப்பு வெளியானது. அதில் நான்கு நகர்ப்புற நல வாழ்வு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் 2, போடிநாயக்கனூர் 1, கம்பம் பகுதியில் 1 என 4 கட்டடத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில், கூடலூர் பகுதியில் 50 லட்சம் மதிப்பில் வட்டார பொதுச் சுகாதார கட்டிடம், பெரிய குளத்தில் 45 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதார கட்டிடம், சிலமலைப் பகுதியில் 22லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த மாவட்டத்தில் 30 லட்சம் மதிப்பில் பொதுச் சுகாதார நிலையங்கள் கட்டிடங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன நரம்பியல் சிகிச்சைப் பிரிவுக்கு 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான உபகரணங்கள் குறித்து ஆய்வு செய்து நரம்பியல் துறை விரைவில் தொடங்கப்படும்”என்றார்.
இதையும் படிங்க:கோயில் கோபுரத்தில் ஆதீன மடாதிபதிகள் சிலைகள்.. சீர்காழி முழுவதும் போஸ்டர்கள்.. நடந்தது என்ன?