தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள டி. சுப்புலாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டுவருகின்றன.
இந்தக் கிராமத்திலிருந்து டி. ராஜகோபாலன்பட்டிக்குச் செல்லும் சாலையில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அந்தப் பகுதியில் செல்லம் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி்க கூடம் அப்படியே இடிந்து விழுந்தது.
இதில் நெசவாளர்கள் வெளியே சென்றிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும் கட்டடம் இடிந்து விழுந்ததில், கூடத்தில் இயங்கிக் கொண்டிருந்த நான்கு தறிகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பணியில் ஈடுபட்ட ஒப்பந்தகாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல் துறையினரும், ஒன்றிய அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சேதமடைந்த விசைத்தறிக் கூடத்தைச் சீரமைத்து தருவதுடன், தறிகளையும் பழுதுநீக்கித் தருவதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.