தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சாளார் அணைப்பகுதிக்கு மேல் அமைந்துள்ளது ராசி மலை. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடிசைகள் அமைத்து சுமார் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டங்களில் தினசரி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் மலைவாழ் மக்கள், அரிசி, பருப்பு மசாலா உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய தேவைக்கு பெரியகுளம் மற்றும் தேவதானப்பட்டிக்கு தான் வர வேண்டும்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ராசி மலை மலை வாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச அரிசி மாதத்தில் 15 முதல் 20 நாள்களில் காலியாகிவிடுவதாகவும், மற்ற நாள்களின் உணவுத் தேவைக்கு கடைகளில் பொருள்கள் வாங்கி வாழ்க்கை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவால் கடந்த 20 நாள்களாக தினக்கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி உள்ளோம். அரசு வழங்கிய ரூ.1000 நிவாரணத் தொகை கிடைத்தும் அரிசி, காய்கறி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இங்கிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள தேவதானப்பட்டிக்கு பேருந்து வசதி இல்லாதால் நடக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் அரசு வழங்கிய அரிசியை கொண்டு கஞ்சியாக சாப்பிட்டு வருகிறோம். உணவுக்கு தேவையான உப்பு கூட இல்லாத நிலையில் உப்பில்லாத கஞ்சி உணவை சாப்பிட்டு வருகிறோம்" என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய உணவுப் பொருள்களான காய்கறி, மளிகை பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து!