தேனி: மாவட்டம் அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம். இவர், தனது மகள் தங்கலட்சுமியை, கானாவிளக்கு பகுதியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவருக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் முடித்துக் கொடுத்தார். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு மனைவி தங்கலட்சுமி இடம் அவரது கணவர் சிங்கராஜ் வரதட்சணை கேட்டு சில மாதங்களாக கொடுமைப்படுத்தி துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தங்கலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், தங்கலட்சுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தங்கலட்சுமியின் தந்தை தங்கம், தனது மகள் தற்கொலை செய்து கொண்டது குறித்து தேனி கானாவிளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் தற்கொலைக்கு மருமகன் தான் காரணம் என்றும் வரதட்சணை கொடுமை தான் காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிவுற்று இன்று (ஜூலை 08) கணவர் சிங்கராஜ் அவரது மனைவியான தங்கலட்சுமியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியது, தற்கொலை செய்ய தூண்டியதற்கான சாட்சிகளின் அடிப்படையில் சிங்கராஜ் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.
இதனால், கணவர் சிங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார். மேலும், இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி சிங்கராஜ் என்பவரை சிறையில் அடைக்க காவல் துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இந்தியாவில் தொடர்ந்து இந்த வரதட்சணை கொடுமைகள் ஆங்காங்கே நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதனைத் தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்த விவகாரத்தில் தீர்வு கொண்டுவர முடியவில்லை. நீதிமன்றங்களிலும் பல சட்டங்கள் இருந்தும் இந்த வரதட்சணை கொடுமையை ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.
வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வாரண்ட் இல்லாமல் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முடியும், கைது செய்யப்பட்டவர்களுக்கு பெயில் கிடைக்காது, இவர்கள் மீது குற்றம் சுமத்தியவர் நினைத்தால் கூட மறுபடியும் வழக்கை வாபஸ் வாங்க முடியாது
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர்படுத்தி அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியே வர முடியும்.
வரதட்சணை இறப்பு சட்டம்
ஒரு பெண் திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் உடல் காயத்துடன் அல்லது தீக்காயங்களுடன் அல்லது சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்து இருந்தால், அது வரதட்சணை இறப்பாக கருதப்படுகிறது. இதில், சம்பந்தப்பட்ட மணமகன் வீட்டார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கக்கூடும்.
இந்த, விவகாரத்தில் பெண்ணுக்கு வரதட்சணையாக கொடுத்த அனைத்தையும் பெண் வீட்டாரிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதில் தொடர்புடையவர்களுக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், இந்த வரதட்சணை கொடுமையை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசாங்கம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக திட்டமிட்டு திருட்டு..350 வழக்குகள்.. மணப்பாறையில் பலே திருடன் சிக்கியது எப்படி?