தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள முந்தல் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். மூணார் தேசிய நெடுஞ்சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகாமையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் இருப்பதால் கிராம மக்கள் தங்களது ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் வெடி வெடித்து விளையாடிக் கொண்டிருந்தபொழுது வெடி சத்தம் கேட்ட பிச்சைமணி என்பவருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட ஆடுகள் பயந்து போய் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்று பார்த்த பிச்சைமணி அங்கு சிறுத்தைப்புலி ஒன்று ஆடுகளை கொடூரமாக கொன்று தின்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால். அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரையும் கூச்சலிட்டு வரவழைத்து நேரில் சென்று பார்த்த பொழுது சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
பின்னர் வனப்பகுதியில் சென்று பார்த்த பொழுது 10க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தைப்புலி கொன்று தின்றுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், இறந்த ஆடுகளை மலைப்பகுதியில் இருந்து எடுத்து வர முடியாமல் சிறுத்தைப் புலிக்கு பயந்து கீழே இறங்கிவிட்டனர். ஆடுகளைக் கொன்று தின்ற சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.