கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணார் அருகே அமைந்துள்ளது பெட்டிமுடி. உலக சுற்றுலா பயணிகளை தன்வசம் இழுக்கும் மூணாரில், இரவிக்குளம் தேசியப் பூங்கா அருகே ராஜாமலை எனும் இடத்திற்கு அடுத்தாற்போல அமைந்துள்ள பெட்டிமுடி பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் லைன்ஸ் எனச் சொல்லப்படும் நான்கு குடியிருப்புகள் உள்ளன.
கேரளாவில் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள், எஸ்டேட்களில் பணிபுரிபவர்களுக்காக கட்டித் தரப்பட்டது தான் இந்த குடியிருப்புகள். இதில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழர்களே. தென்மேற்குப் பருவமழை தற்போது கேரளாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெட்டிமுடி பகுதியில் நேற்றிரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிமுடி பகுதி குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 80பேர் வரை மண்ணில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கனமழையால் மின்சாரம், சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ராஜமலை செல்வதற்கான முக்கிய வழித்தடத்தில் உள்ள பெரியவாரை பாலமும் சேதமடைந்ததால் சம்பவ இடத்திற்கு மீட்புப் பணியினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து மாற்று பாதை வழியாக சென்று தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மூணார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (46), மயில்சுவாமி (48), கண்ணன் (40), அன்னாதுரை (44), ராஜேஸ்வரி (43), கௌசல்யா(25), தபஸ்ஸியம்மாள்; (42), சிந்து (13), நிதீஷ் (25), பன்னீர்செல்வம் (50), கணேசன் (40) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களில் 12 பேர் மீட்கப்பட்டனர். தீபன்(25), சரஸ்வதி(52) மற்றும் சிந்தலட்சுமி(33) ஆகிய மூன்று பேர் மூணார் டாடா மருத்துவமனையிலும், உயிருக்கு ஆபத்தான நிலையில், பழனியம்மாள்(50) என்ற பெண்மணி கோலஞ்சேரி மருத்துவக்கல்லூரியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ராஜாமலை நிலச்சரிவில் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சித்த மருத்துவத்தால் கரோனாவை வெல்ல முடியும் - தமிழ்நாடு அரசுக்கு சவால்