தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் ஏல வியாபாரிகள், தோட்ட உரிமையாளர்கள், கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் நறுமண வாரிய பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் போடிநாயக்கனூரில் உள்ள ஏலக்காய் விற்பனை மையத்தில் ஏலம் நடத்துவது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், சமூக இடைவெளி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு கூட்டமைப்பின் சார்பில் கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். மேலும் இது தொடர்பாக தங்களது கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் பேசி, ஓரிரு தினங்களில் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாகவும் அந்தந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஏல விவசாயிகள் வேண்டுகோளின்படி, அரசு விதிமுறைகளுக்குட்பட்டு கூடிய விரைவில் போடிநாயக்கனூர் ஏல விற்பனை மையத்திற்கு அனுமதி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அப்போது தேனி மாவட்டத்தில் வசிக்கின்ற ஏலத்தோட்ட உரிமையாளர்கள் கேரள மாநிலம் சென்று, தங்களது தோட்டங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், இடுக்கி மாவட்ட ஆட்சியருடன், தேனி மாவட்ட ஆட்சியர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
437 தோட்ட உரிமையாளர்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதற்கு, இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தகுந்த அனுமதி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அறிக்கையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!