தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 14 வார்டுகளில் அதிமுக - திமுக தலா 7 இடங்களில் வெற்றி பெற்றன. சமஅளவில் வெற்றி பெற்றிருந்ததால், கடந்த 2 மாதங்களில் 2 முறை ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கடமலை - மயிலை ஒன்றியத்தில் 8ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுகவின் பலம் 8ஆக உயர்ந்தது. இதற்கிடையே இன்று கடமலை - மயிலை ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக அணியிலிருந்து 8 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திமுக கவுன்சிலர்கள் 7 பேர் தேர்தல் நடைபெறும் அறைக்கு வந்தனர்.
அங்கு எதிர்வரிசையில் அமர்ந்திருந்த அணிமாறி சென்ற, கவுன்சிலர் தமிழ்ச்செல்வனை திமுகவினர் தங்கள் பக்கம் வரும்படி வற்புறுத்தினர். மேலும் சில கவுன்சிலர்கள் அவர் அருகில் சென்று தமிழ்ச்செல்வனின் கையைப் பிடித்து, வலுக்கட்டாயமாக வரும்படி அழைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தி அவரவர் இருக்கையில் அமர வைத்தனர். இதனைத்தொடர்ந்து அறைபூட்டப்பட்டு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவில் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றாவது வார்டு உறுப்பினர் சந்திரா கடமலை - மயிலை ஒன்றியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கிடையே அதிமுகவினர் வாக்களித்த இரண்டு வாக்குகள் செல்லாதது என்றும், அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறி, திமுக ஒன்றியக் கவுன்சிலர்கள் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் கடமலை - மயிலை ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அதிமுகவினருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதையும் படங்க: சிவகாசியில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!