தேனி: முல்லைப் பெரியாறு அணையை நிறுவிய பென்னிகுவிக் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மாட்டி வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குவிக்கை மனித கடவுளாகத் தேனி மாவட்ட மக்கள் வணங்கி வருகின்றனர்.
மேலும் அவரது பிறந்த நாளான ஜனவரி 15ஆம் தேதி சமத்துவப் பொங்கலாக ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பென்னிக்குவிக்கின் 180ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத்தின் சார்பில் மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் பங்கேற்றன. தேன்சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான், நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 7 வகையான பிரிவுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், வண்டி ஓட்டும் சாரதிகளுக்கும் பரிசுத்தொகையும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியைத் திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், ஐந்து மாவட்ட பெரியார் - வைகை பாசன விவசாய சங்கத்தலைவர் எஸ்.ஆர். தேவர் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். சுருளிப்பட்டியில் இருந்து சுருளி அருவி வரையுள்ள சுமார் 8 கிலோ மீட்டார் தூரம் நடைபெற்ற இப்போட்டியை இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.