தேனி:மருத்துவ படிப்பிற்கான தமிழ்நாடு அரசின் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஓபிசி பிரிவிலேயே மருத்துவ படிப்பை தேர்வு செய்ய இருப்பதாக மாணவர் ஜீவித்குமார் பேட்டி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்த ஜீவித்குமார், சில்வார்பட்டி அரசு மாதிரிப்பள்ளியில் கடந்த 2019ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தார். முதல்முறை நீட் தேர்வில் 193 மதிப்பெண்கள் பிடித்து தோல்வியடைந்தார். இதையடுத்து தனியார் பயிற்சி மையத்தில் படித்து இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வை எதிர்கொண்டு 664 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவர்கள் தரவரிசையில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், அகில இந்திய மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு அரசின் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர் ஜீவித்குமார் முதலிடம் பிடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்," தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஏற்கெனவே நீட் மதிப்பெண் அடிப்படையில் ஆந்திராவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், 7.5விழுக்காடு இட ஒதுக்கீடை தேர்வு செய்யாமல், ஓபிசி பிரிவின் மூலம் தற்போது சென்னையில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்ய உள்ளேன்.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் 7.5விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மற்றொரு ஏழை மாணவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள இந்த 7.5விழுக்காடு இட ஒதுக்கீடு வருங்காலங்களிலும் தொடர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வில் வென்ற இலங்கைத் தமிழரின் மகள்' - இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர முயற்சி!