கரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களின் இல்லங்களுக்கே மளிகைப் பொருள்களை விநியோகம் செய்திடும்வகையில் thenisandhai என்ற செயலியை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்திடும்வகையில், அவரவர் வீடுதேடி பொருள்களைக் கொண்டுச்சேர்க்க வசதியாக ஏழு சிறிய ரக சரக்கு வாகனங்களை மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது. பொருள்களைத் தேர்ந்தெடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் thenisandhai என்ற செயலி (Application) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்செயலியை Google Playstore மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன்மூலம் தரமான மளிகைப் பொருள்களை நியாயமான விலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே பதிவுசெய்து பெற வழிவகைசெய்யப்பட்டுள்ளது" என்றார்.
அதன்படி, பொதுமக்களின் தேவைக்கேற்ப ஆயிரத்து 999 ரூபாய்க்கு மெகா பேக், 999 ரூபாய்க்கு பட்ஜெட் பேக், 499 ரூபாய்க்கு தூய்மை பேக் என மூன்று பிரிவுகளில் மளிகைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆட்சியர், பொருள்கள் ஆர்டர் செய்வோரின் கணினி பதிவு எண்களின் அடிப்படையில் முதல் ஏழு நபர்களுக்கு தங்கப் பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மளிகைப் பொருள்கள் தேவைப்படுவோர் மேலே குறிப்பிட்டுள்ள செயலியின் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சேவை மைய வாட்ஸ்அப் எண்களான 7548857532, 9585350940, 9487644135 ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் பிளிப்கார்ட் எடுத்துள்ள முக்கிய முடிவு!