தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றுவரை 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண்மணி, ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் என இரண்டு பேர் உயிரிழந்தனர்ர்.
தொடர்ந்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.தேனி, கம்பம், பெரியகுளம், மதுரை ஆகிய இடங்களில் 23 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 11 நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரியகுளம் பகுதியில் சில நாள்களுக்கு முன் கரோனா உறுதிபடுத்தப்பட்ட குழந்தைகள் நல மருத்துவருடன் தொடர்பில் இருந்த நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் என ஆறு பேருக்கும், சென்னையிலிருந்து பெரியகுளம் திரும்பிய 55 வயதான நபர் ஒருவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வந்த பெரியகுளத்தைச் சேர்ந்த 27 வயது பாதுகாப்பு படை வீரர் ஒருவர் என பெரியகுளத்தில் மட்டும் எட்டு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையிலிருந்து வந்த போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், கேரளாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய உத்தமபாளையம் அருகில் உள்ள கோம்பையைச் சேர்ந்த 50 வயதான நபர், கோட்டூரைச் சேர்ந்த ஒருவர் என 11 நபர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் பெரியகுளம் மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மதுரையில் தனியார் மருத்துவமனையிலும் ராசிங்காபுரம், கோம்பை, கோட்டூர் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் தேனி அரசு மருத்துவமனையிலும், பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் என இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த்தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக பெரியகுளம் பகுதியில் இதன் தாக்கம் சற்று கூடுதலாகவே அதிகரித்து வருவதால் அப்பகுதியினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் உயிருக்குப் போராடும் மருத்துவ மாணவர் - பெற்றோரின் கண்ணீர் போராட்டம்