தேனி: தமிழக - கேரளா எல்லைப் பகுதியான தேனியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பெண் தொழிலாளர்கள் கேரளாவில் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு பணிக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கம்பம் மெட்டு அருகே உள்ள கல்லறைகள் எஸ்டேட் பகுதியில், ஏலத் தோட்டப் பணிக்குச் சென்று பணியாளர்கள் தங்களது வாகனத்தில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, நெடுஞ்சாலையில் மது போதையில் வந்த சில நபர்கள் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
அதனை அடுத்து ஜீப் டிரைவரை தகாத வார்த்தைகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சார்ந்த ஓட்டுநரை சாலையில் வைத்து தாக்கியுள்ளனர். அவர்கள் மதுபோதையில் இருப்பதை உணர்ந்த தமிழ்ப்பெண்கள், அதனைத் தட்டி கேட்க முயற்சிக்கையில் அவர்களை தரக்குறைவாகப் பேசி தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவுசெய்த சிலர் அதனை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: International tiger Day: சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு மனிதச் சங்கிலி: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு.!
மேலும் இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு வரும் கேரளா வாகனங்கள் அடித்து உடைக்கப்படும் என சமூக வலைதளத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த கம்பம் நகரச் செயலாளர் அறிவழகன் (வயது 42) ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆடியோ வெளியிட்ட அறிவழகன் மீது வழக்குப்பதிவு செய்த கம்பம் போலீசார் அறிவழகனை கைது செய்தனர். மேலும் இது போன்ற சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அடித்து உடைக்கப்படும் என சமூக வலைதளத்தில் ஆடியோ வெளியிட்ட நபரை கைது செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கேரளாவில் சென்று பணிபுரியும் தமிழக மக்களின் பாதுகாப்பை, பினராயி விஜயன் தலைமையிலான அரசு உறுதிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புதிய ரயில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தென்காசி மக்கள்.. நிறைவேற்றுமா மத்திய அரசு?