தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள உ.அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). முத்துச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). இருவரும் நண்பர்கள். இதில் பால்பாண்டிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா என்பவரிடம் பால்பாண்டியின் மூத்த மனைவி செல்வி சிரித்து பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பால்பாண்டி, முத்தையாவை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.
இதனால், தனது நண்பர் பாண்டியனுடன் சேர்ந்து கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உறங்கிக்கொண்டிருந்த முத்தையாவை கல்லால் தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கின் விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பால்பாண்டி, பாண்டியன் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.