தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜா செல்வகுமார். இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த கடையில் நேற்று நகையின் மொத்த இருப்பை சரிபார்க்கும்போது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது கடந்த 8ஆம் தேதி அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் ஒரு ஜோடி வளையலைத் திருடிச் செல்வது தெரியவந்தது.
இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர் செல்வகுமார் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்ததில் நகையைத் திருடியது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் (60), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சரோஜா (40) ஆகியோர் என தெரியவந்தது.
இதனையடுத்து திருட்டு கும்பலை தீவிரமாக காவல் துறையினர் தேடிவந்த நிலையில், கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் பாண்டியம்மாளை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஜோடி தங்க வளையல் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மற்றொரு குற்றவாளியான சரோஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.