கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் விவசாய நிலங்களைக் காப்பாற்றும் நோக்கில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கேரள அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விவசாய நிலங்களில் 1,500 அடிக்கு மேல் கட்டப்பட்டுள்ள குடியிருப்பல்லாத வணிக ரீதியான கட்டிடங்களின் பட்டாவை கட்டாயம் அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதை அரசே கட்டிட உரிமையாளருக்கு வாடகைக்கு விடும். மூன்று கட்டிடங்களுக்கு மேல் இருந்தால் இரண்டு நிலங்களின் பட்டாவை அரசு கைப்பற்றும் என உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி அரசு உத்தரவைத் திரும்பப் பெறக்கோரி, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கி மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு என்பதால், கேரளாவின் இதர முக்கிய நகரங்களுக்குச் செல்லும் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு கேரளாவிற்குச் செல்லும் தொழிலாளர்கள் வேலை இழப்பைச் சந்தித்துள்ளனர். மொத்தத்தில் இடுக்கி மாவட்டத்தின் முழு அடைப்பு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.