தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகண்ணன்(42). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி (36) என்பவருடன் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 14ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
அங்காள ஈஸ்வரி தனது தந்தையான கணேசன் வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முத்து கண்ணனுக்கும் அங்காள ஈஸ்வரியின் தம்பியான சங்கிலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் முத்துகண்ணன் அரிவாளால் வெட்டியதில், காயமடைந்த சங்கிலி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சில நாட்களுக்கு முன்பாக வீடு திரும்பியுள்ளார்.
![murder](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4433851_murder.jpg)
மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முத்துக்கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகண்ணன் நேற்று சீலையம்பட்டியில் உள்ள அங்காள ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்கு சென்று, தனது மகன்கள் தன்னிடம் பேசுவதில்லை எனவும், அதற்கு காரணம் நீயும் உன் குடும்பத்தாரும் எனக்கூறி அங்காள ஈஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்துகண்ணன் அருகே இருந்த கத்தியை கொண்டு அங்காள ஈஸ்வரியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனைக் கண்ட இவர்களது சிறிய மகன் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து முத்துகண்ணனை அங்கிருந்து விரட்டியதையடுத்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதனிடையே பலத்த காயம் ஏற்பட்ட அங்காள ஈஸ்வரி உடனடியாக சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள முத்துகண்ணை தேடி வருகின்றனர்.
மனைவியை கனவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.