தேனி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வாஞ்சிநாதன். இவருக்கு முத்துச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்போது முத்துச்செல்வி மூன்றாவது முறையாக கருத்தரித்து சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவரின் அலட்சியத்தால் தனது மனைவியின் கருப்பையில் பஞ்சு கழிவுகள் இருந்ததாக காவல் நிலையம், மாவட்ட ஆட்சியரிடம் வாஞ்சிநாதன் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, எனது காரில் அழைத்துச் சென்றேன். மருத்துவமனையை அடைந்ததும், காரிலேயே என் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு அங்கிருந்த செவிலியர்கள், எனது மனைவிக்கு முதலுதவி செய்தனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர் காஞ்சனா, தங்களிடம் கடிந்து கொண்டே என் மனைவியின் கர்ப்பப் பையினை சுத்தம் செய்தார். பின்னர், கர்ப்பப் பையில் இருந்த கழிவுகளை குழந்தை குடித்துவிட்டதாகக் கூறி, கம்பம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததார்.
உடனடியாக அன்று இரவே, கம்பம் அரசு மருத்துவமனைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செனறேன். அங்கு எனது மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு ஒன்றும் இல்லை, தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள் என கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 27 அன்று வீடு திரும்பினோம். ஆனால் வீட்டிற்கு வந்த நாளில் இருந்து எனது மனைவியின் அடி வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகவும், உட்கார முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவரை, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தோம். அங்கு முத்துச்செல்வியை பரிசோதித்த மருத்துவர்கள், பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப் பையை சுத்தம் செய்தவர்கள், உள்ளே பஞ்சை வைத்து விட்டனர் எனக் கூறி, ஒரு கைபிடி அளவு பஞ்சை எடுத்து காண்பித்தனர். எனவே அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்த பெண்கள் தூக்கிட்டு தற்கொலை!