தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச சேலை, வேஷ்டி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள 517 நியாய விலைக்கடைகள் மூலமாக 4,08,385 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.108.92 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.
இதற்கான தொடக்க விழா இன்று (டிச.30) போடி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "2023 தொலை நோக்குத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 5,000 நபர்களுக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாள்களில் அது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கூடுதலாக 2,000 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு முன்மொழிவுகள் தயார் செய்யப்பட்டு, அந்தப் பணிகளும் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றினார்" என்றார்.
மேலும் இதில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம் - ஜெயக்குமார்