தேனி: பெரியகுளம் அடுத்த போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்ட அகமலை கிராமம் ஊராட்சி பகுதியாகும். ஆனால், இந்த மலைக் கிராம மக்களின் சாலை போக்குவரத்து என்பது பெரியகுளத்தில் இருந்து சோத்துப்பாறை அணை வழியாக உள்ள சாலையில் செல்லும் நிலையில் உள்ளது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான கண்ணக்கரை, சொக்கநிலை, அலங்காரம், மறையூர் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஐந்து தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு, பெரியகுளத்தில் இருந்து கண்ணக்கரை வரையில் தார் சாலை உள்ள நிலையில் கண்ணகரை முதல் மறையூர் வரையில் 9 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை வசதியே இல்லாத நிலையில் தொடர்ந்து சாலை வசதி வேண்டிக் கடந்த 25 ஆண்டுகளாகப் போராடி வந்த மக்களுக்கு, கடந்த ஆண்டு இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் மண் சாலையில் கற்களைப் பதித்துள்ளனர்.
இதன் மூலம் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை மட்டும் பயன்படுத்தி அங்கு விளைவிக்கும் காய்கறிகள் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களைக் கொண்டு வரவும், அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களையும் கொண்டு செல்லவும் கடந்த எட்டு மாதங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால், கற்களை கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலை பல இடங்களில் பெயர்ந்து சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டுப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதனால், அந்த சாலையில் ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மலைக் கிராம மக்கள் மீண்டும் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் அங்கு விளையும் விவசாய விளைப் பொருட்களையும் சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சனை குறித்து மலைக் கிராம மக்கள் கூறுகையில், "கடந்த 300 ஆண்டுகளாக இந்த மலைக் கிராமத்தில் வாழ்ந்து வரும் எங்களுக்கு இதுவரையில் சாலை வசதி இல்லாத நிலையில் பல கட்ட போராட்டத்தால் கற்சாலை 48 லட்ச ரூபாயில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது.
ஆனால் அது தற்பொழுது தொடர் மழையால் சேதமடைந்து மீண்டும் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மலைக் கிராமத்திற்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் அமைக்கப்பட்ட சாலையில் முழுமையாக கான்கிரீட் சாலை அமைத்து மலைக் கிராம மக்களின் சாலை போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும்" என்று அப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் மாநகராட்சி ஆணையர் திடீர் மாற்றம்: அரசியல் அழுத்தம் தான் காரணமா? சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எழுப்பும் கேள்வி..!