தேனி: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே குண்டலா புதுக்கடியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்த மழையினால் மலைப் பாங்கான இடங்களில் புதிதாக நீர் அருவியாக உருவெடுத்து குடியிருப்பு பகுதிகளில் வந்து கொண்டிருந்தது.
நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆனால் நிலச்சரிவு குடியிருப்பு பகுதி அடைவதற்கு முன்பே நின்று விட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் மற்றும் இரண்டு கடைகள் முற்றிலுமாக மண்ணில் புதைந்தன.
இந்த கிராமத்தில் இருந்த 141 குடும்பத்தைச் சேர்ந்த 450 பேர் புதுக்குடி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிராமத்தில் நிலச்சரிவில் யாராவது காணாமல் போய் உள்ளார்களா என வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மூணாறு அருகே உள்ள பெட்டி முடி என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர். இரண்டாம் ஆண்டிற்கான நினைவஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூழலில் மீண்டும் அதே நாளில் ஏற்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக நீர் திறப்பு