தேனி மாவட்டம் கூடலூரில் அரசு உதவி பெறும் என்.எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் விதைப்பந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த முன்று நாட்களாக நாட்டு மரங்களான வேம்பு, பூவரசு, புங்கை, மலை வேம்பு, சந்தன வேம்பு, சரக்கொன்றை உள்ளிட்ட மர விதைகளை வைத்து 12 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட விதைப்பந்துகளை மழை பெய்து கொண்டிருக்கும் போதே மாணவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் வீசுவதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'மழைப்பொழிவை அதிகப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மரங்கள் முக்கியமானவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது பொதுமக்களாகிய நமது பொறுப்பாகும்.
இதன் வெளிப்பாடாக மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகள் தயாரித்த 10 ஆயிரம் விதைப்பந்துகள் முக்கிய இனணப்புச் சாலை, நீர்த் தேக்க கரைப்பகுதி, என பல இடங்களில் போடப்பட்டன. தற்போது அது பல இடங்களில் செடிகளாக முளைத்துள்ளது' என்றார்.