தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன. 06) நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றிருந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இதனிடையே ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் செயற்பொறியாளர் அலுவலகத்தில், அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த அலுவலக வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவல் துறையினர் விரைந்துசென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வெள்ளைப்பாண்டியின் மகன் குபேந்திரன் என்பது தெரியவந்தது.
குபேந்திரன், ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட கன்னியப்பிள்ளைபட்டி பகுதியில் ஹாலோ பிளாக் சாலை அமைக்கும் பணியைச் செய்து முடித்துள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தத் தொகையை வழங்குவதில் செயற்பொறியாளர் கவிதா காலதாமதம் செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னைப் போன்று பிற அரசு ஒப்பந்ததாரர்களுக்கும் இதேபோல செயற்பொறியாளர் காலதாமதம் செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஒப்பந்ததாரருக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை விரைவில் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.