தேனி : ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்திலிருந்து இங்கு 8 ஆம் வகுப்பு வரை 103 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் ஆறு ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கம் முதலே இப்பள்ளியில் உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தவில்லை என்றும் ஆங்கில ஆசிரியர் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை ஆங்கில ஆசிரியர் பள்ளிக்கு பணியமர்த்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று (ஜூலை 21) இந்தப் பள்ளிக்கு மாணவர்கள் யாரையும் அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து மரத்தடியில் அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் உள்ள அனைத்து பிள்ளைகளும் இந்த அரசு பள்ளியை தான் நம்பி உள்ளனர். 2023 கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் ஆகியும் கூட எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கில பாடம் நடத்தப்படவில்லை. இது குறித்து முறையாக பெற்றோர்கள் சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டபோது, அவர் தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து தாங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்த போது இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனாலும் தற்போது வரை ஆங்கில ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. இதுகுறித்து மீண்டும் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டபோது, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆசிரியரை நியமனம் செய்து அவருக்கான ஊதியத்தை பெற்றோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொடுங்கள் என்று கூறினார்.
இது எந்த விதத்தில் நியாம். இதனால் எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கேள்வி கூறியாகியுள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். வருகிற மாதம் 21 ஆம் தேதி தங்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு வரும் நிலையில் ஆங்கிலத்தில் தங்களுக்கு எதும் தெரியாமல் எவ்வாறு தேர்வு எழுதுவது என மாணவர்கள் கேள்வி எழுப்பி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு ஜூலை 24ம் தேதி வெளியீடு!