தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 93 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருமானமின்றி உள்ள ஏழை, எளிய மாணவர்களின் குடும்பத்திற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அப்பள்ளியில் உள்ள 6 ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து தங்களால் முடிந்த பணம் போட்டு அதில் வீட்டிற்குத் தேவையான சமையல் பொருள்களை, அப்பள்ளியில் படிக்கும் 93 மாணவ, மாணவிகள் மற்றும் 7 தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 100 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, காய்கறிகள், முகக்கவசம் என ஒரு குடும்பத்திற்கு ரூ. 300 மதிப்புள்ள பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கியுள்ளனர்.
இவ்வாறாக, ஏழை எளிய மாணவர்களின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இத்தகைய செயலை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு விவரம் தெரியாமல் ஒரு மாதமாக நடந்துச் சென்ற பாட்டிகள்: உதவிய தருமபுரி ஆட்சியர்