தேனி: ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள குமுனந்தொழு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமேந்திரன். விவசாயியான இவர், தனது பூர்வீக விவசாய நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக மயிலாடும்பாறை குறுவட்ட அளவர் செல்வரங்கனை நாடியுள்ளார். அவர் 15,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தன்னால் லஞ்சம் கொடுக்க முடியாது என்று விவசாயி கூறியுள்ளார். ‘உனக்காக வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொள்கிறேன். 14,000 ரூபாயாவது கொடு என்று குறுவட்ட அளவர் கேட்டுள்ளார். இதையடுத்து விவசாயி ராமேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தரராஜன் தலைமையிலான காவல் துறையினர், 15,000 ரூபாய் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி ராமேந்திரனிடம் கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற குறுவட்ட அளவர் செல்வரங்கனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். குறுவட்ட அளவர் செல்வரங்கனை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை!