தேனி: திருச்சியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டி பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மதுபோதையில் திடீரென பேருந்தின் மீது கல் வீசி தாக்கி உள்ளார்.
இதில் பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள சைடு கண்ணாடி முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி கல் வீசி தாக்கிய போதை ஆசாமியிடம், எதற்காக கல் வீசினாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பகுதியில் இருந்த அவரது உறவினர்களும் அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரையும் தாக்க வந்தனர்.
இதனையறிந்த பேருந்து பயணிகள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடந்த சம்பவங்களை பேருந்தில் பயணித்த பயணிகள் பதிவு செய்த வீடியோ காட்சி வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பேருந்து பயணிகள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை கொண்டு அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கி நபரையும், அவருக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட முயன்றவர்களையும், காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தயவு செய்து அமைதி காக்கவும் - தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அன்பான கோரிக்கை!