தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் முறையாகக் குடிநீர் வரத்தாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஆறு மாதங்களாக தங்களுக்கு முறையாகக் குடிநீர் வழங்கப்படுவதில்லை எனக் கூறி இன்று (டிச.14) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டமனூர் - தேனி சாலையில் திடீரென பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி, கடந்த ஒரு மாதம் முழுவதுமாக குடிநீர் வழங்கவில்லை எனப் புகார்களை முன்வைத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால், ஆண்டிபட்டி - வருசநாடு சாலையிலும், கண்டமனூரில் இருந்து தேனிக்குச் செல்லும் முக்கிய சாலையிலும் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. அதைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையிலான காவல்துறை மற்றும் கண்டமனூர் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டமானது கைவிடப்பட்டது. மேலும், காலிக் குடங்களுடன் பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளாக செயின் பறித்தவரைக் கண்டுபிடிக்க முடியல..! வள்ளியூர் போலீசார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!