கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. போதிய மழையின்மையால் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடிகள் காய்ந்து கருகிய நிலையில் உள்ளதால் வனத்தில் தீ ஏற்படுகிறது. அவற்றை கட்டுப்படுத்த வனத்துறை தீவிரமாக போராடியும், அவ்வப்போது எரிந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள பரமசிவன் கோயில் மலைப் பகுதியில் இன்று பிற்பகல் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதால் சிறு தீப்பொறி ஏற்பட்ட உடனே மலைப்பகுதியில் உள்ள புற்கள், செடிகளும் வேகமாக பற்றி எரியத் தொடங்கியது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைப்பதற்கு கடுமையாக போராடினர். தீயணைப்பு வாகனம் மலை உச்சிக்கு செல்ல முடியாததால் வீரர்கள் மற்றும் வனத்துறையினர் மட்டும் மலைப் பகுதிக்கு விரைந்து சென்று மரக் கிளைகளை ஒடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
இது போன்ற உயரமான மலைப்பகுதிகளில் ஏற்படுகின்ற காட்டுத்தீயை அணைப்பதற்கு தீத்தடுப்பு கருவிகள் வழங்கப்படாததால் தீ விபத்தை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. எனவே வனத்தில் ஏற்படுகின்ற காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கருவிகள் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.