சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துள்ள நிலையில் வனப்பகுதியில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 100 ஹெக்டெருக்கு மேல் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மற்றும் அரிய வகை மரங்களும் தீயில் கருகியிருக்கக் கூடும் என வன ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
மேலும் காட்டுத் தீ கோடைக் காலங்களில் அதிகமாக ஏற்படும் என்பதால் வனத்துறை இதனைக் கவனத்தில் கொண்டு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். வன ஆர்வலர்களின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரமாக, தேனி வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், இதனால் வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் வனவிலங்குகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பரவி வரும் காட்டுத்தீயில் காட்டெருமை, மான், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல வகையான வனவிலங்குகள் தீயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தீ அணைக்கப்பட்டுவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் கூறினாலும் சமீபகாலமாக அதிகரித்து வரும் வெப்பம், காட்டுத்தீ அதிகரிப்பதற்கு காரணமாக இருந்தன என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களில் முயல்பாறை, தேன்கனிக்கோட்டை, பிச்சாங்கரை போன்ற வனப்பகுதிகளில் தீ பரவிய நிலவில், அதிர்ஷ்டவசமாக வனத்துறையினர் முதற்கட்ட நிலையிலேயே தீயை அணைக்க முடிந்தது.
மேலும் அசம்பாவிதங்கள் நிகழும் பட்சத்தில் வனத்துறையினர் வனப்பகுதிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பரவும் தீயைக் கட்டுப்படுத்த பல கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல், கொடைக்கானல், தேனி, தேன்கனிக்கோட்டை, கம்பம் மற்றும் மேற்குத்தொடர்ச்சியில் உள்ள சில வனப்பகுதிளில் காட்டுத் தீ கடுமையாக பரவியது. வன விலங்கு ஆர்வலர்களின் கூற்றுப்படி, ஒரு பக்கம் காட்டுத் தீ வெப்பத்தினால் பரவுகிறது என்றாலும், மறுபக்கம் மனிதர்களினாலே பரவுகிறது என்கின்றனர்.
இதுகுறித்து விஜய் கிருஷ்ணராஜ், நீலகிரி கானுயிர் சங்கம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயக்கம், நம்மிடம் கூறுகையில், "கோடை காலத்தில் காட்டுத் தீ என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. இது முற்றிலும் மனிதர்கள் தான் இந்த வனத்தீக்கு காரணம். குறிப்பாக கால்நடைகளை மேய்ப்பவர்கள் மற்றும் காடுகள் அருகே புகைப்பவர்கள் மற்றும் சமைப்பவர்கள் தீயை அணைக்காமல் செல்வதால் காட்டுத் தீ ஏற்படுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் வருவதால், அவர்களுக்கு சமைப்பதால், ஒரு சில நேரங்களில் காற்று வீசுகையில் தீ ஏற்படுகிறது.
மேலும் கால்நடைகள் மேய்ப்பவர்கள் வேண்டுமென்றே காட்டுத் தீயை ஏற்படுத்துவார்கள். ஏனெனில், அந்த இடத்தில் திரும்ப புல் நன்றாக வளரும் என்ற நோக்கத்திற்காக இதனை செய்வார்கள்.
மேலும், வனத்துறை அதிகாரிகள் கோடைகாலம் தொடங்கும் போது "காட்டுத் தீ கண்காணிப்பாளர்கள்" என்ற தற்காலிகப் பணியாளர்களை நியமித்து காடுகளை கண்காணிக்கலாம். புல்வெளி அதிகம் உள்ள இடங்களில் ட்ரோன் மற்றும் சேட்டிலைட் இமேஜ் உதவியுடன் தீப்பற்றி எரியும் இடத்தைக் கண்டறிந்து விரைவில் தீயை அணைக்கலாம். வனத்துறை இவற்றை செயல்படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்களை தயாராக வைக்கலாம். மேலும் வனத்துறை சார்பில் தண்ணீர் லாரிகளை கொள்முதல் செய்து தீயை அணைக்க அவற்றையும் தயாராக வைக்கலாம்” எனப் பரிந்துரை செய்தார்.
இது குறித்து தமிழக தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீனிவாச ரெட்டி நம்மிடம் கூறுகையில், "காட்டுத் தீ குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம். மேலும் புல்வெளி பகுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் போதுமான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத் தீ ஏற்படும்போது அதனை அணைக்கும் வகையில் தீயணைப்பு வாகனங்கள் தயாராக உள்ளன," எனத் தெரிவித்த அவர் தீயினால் அழிந்த மரங்களுக்குப் பதிலாக அந்த இடங்களில் போதுமான மரக்கன்றுகள் நடப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வனப்பகுதியில் நிலவும் வறட்சி - உணவு தேடி திரியும் வனவிலங்குகள்!