கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாரிலுள்ள மஞ்சுமலை தேயிலைத்தோட்டத்திற்கு அருகில் உள்ள நீரோடை கரையில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்த தேயிலைத் தோட்ட காவலாளி வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்ததின் அடிப்படையில், எருமேலி வனப்பகுதியில் இருந்து வனக் காவலர்கள் வந்து சிறுத்தையின் சடலத்தை மீட்டனர்.
இறந்த சிறுத்தைக்கு மூன்று வயது இருக்குமென்றும், சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததால் பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் எருமேலி ரேஞ்ச் அலுவலர் தெரிவித்தார். தேக்கடியில் வனத்துறையினரின் ஃப்ரீசரில் சிறுத்தையின் உடல் வைக்கப்பட்டு, நாளை சிறுத்தைக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும் நீரோடையின் மறுகரையில் மற்றொரு சிறுத்தை இருப்பதைக் கண்டதாக தேயிலை தோட்ட காவலாளி வனக்காவலர்களிடம் தெரிவித்தார். இந்த பகுதியில் இரண்டு சிறுத்தைகள் காணப்பட்டதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்னர் சுமார் நான்கு வளர்ப்பு விலங்குகள் சிறுத்தைகளால் வேட்டையாடி கொல்லப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என எருமேலி ரேஞ்ச் அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 பேரை கடித்த கரடி உயிரிழப்பு ... உடற்கூறாய்வுக்குப் பின் வனப்பகுதியில் தகனம்