தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்குத்தொடர்ச்சிமலை ஆகிய இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது.
மேலும் நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு வரை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அருவியல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு பன்மடங்கு அதிகரித்தது. இதனால் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வரும் அருவி நீரோடு பெரிய கற்களும் அதிகளவில் வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்துறையினர் இரண்டாவது நாட்களாக தடை விதித்துள்ளனர்.
தொடர்ந்து அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்குச் செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடர்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: இருவர் உயிரிழப்பு, ஒருவர் மீட்பு