தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. மேலும் ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு மலை கிராமங்களில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக மூலக்கடை கிராமத்தில் உள்ள பாறைக்குளம் ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் மயிலாடும்பாறை பகுதியிலிருந்து மூலக்கடை, அருகுவெளி, தாழையூத்து, வேட்டைக்காரன் புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அப்பகுதி கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் மயிலாடும்பாறையில் இருந்து நரியூத்து வழியாக 7கி.மீ தூரம் சுற்றி சென்று வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதையும் படிங்க : வெள்ளப்பெருக்கால் தவிக்கும் தளிஞ்சி மலைவாழ் மக்கள்!