தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போ.அம்மாபட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது மீனாட்சியம்மன் கண்மாய். சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயில் பொது ஏலம் மூலமாக குத்தகை விடப்பட்டு மீன் வளர்ப்பு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மீனவர்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அரசால் குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது மீனாட்சியம்மன் கண்மாய் எப்.எம்.டி 10 மீனவர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டள்ளது.
இந்த சங்கத்தில் சுமார் 750 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குத்தகைதாரர்கள் இந்த கண்மாயில் கட்லா, ஜிலேபி கெண்டை, ரோகு, மத்தி, அயிலை உள்ளிட்ட ரக மீன்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மீனாட்சியம்மன் கண்மாயில் வளர்க்கப்பட்ட மீன்கள் இன்று(ஆகஸ்ட் 24) காலை செத்து மிதப்பதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியுற்றனர். தொழில் போட்டியால் யாரேனும் தண்ணீரில் விஷம் கலந்துள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் மீன்கள் இறந்ததாக? என வருவாய், காவல் துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை அலுவலர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மீன்கள் இறப்பினால் சுமார் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேசமயம் இறந்த மீன்களை கண்மாய்களுக்கு வரும் கூழைகிடா உள்ளிட்ட வெளிநாட்டு பறவையினங்கள் உட்கொள்வதால் அவைகளும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டள்ளது.