நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக மாணவர்கள் மற்றும் அவரது தந்தைகள் என இதுவரை 8 பேரை தேனி சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் முக்கிய இடைத்தரகராக இருந்த முகமது ரசீத்தை தேடும் பணியில் சிபிசிஐடி காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஒரே பெயரில் நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை தரக்கோரி தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏ-யிடம் சிபிசிஐடி சார்பாக விண்ணப்பிக்கப்பட்டது. அதையடுத்து தேசிய தேர்வு முகமை அளித்த தகவலின்படி, சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா என்பவரை தேனி சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்ட மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி இருவரிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தேசிய தேர்வு முகமை அளித்த முகாந்திரத்தின் அடிப்படையில் மாணவியிடம் நடத்திய விசாரணையில், பிரியங்கா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதனை உறுதிப்படுத்திட அவர் படித்த கல்லூரி முதல்வர் தாமோதரன், கண்காணிப்பாளர் பொன்னம்பல நமச்சிவாயம் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் மாணவி பிரியங்கா ஆள்மாறாட்டம் செய்தது உறுதிபடுத்தப்பட்டது. அதையடுத்து பிரியங்கா அவரது அம்மா மைனாவதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் தேனி நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அம்மா - மகள் இருவரும் மதுரை மத்திய சிறைக்கு பெண் காவலர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறைக்குச் செல்லும் முதல் மாணவி பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நள்ளிரவில் விசாரணை, கதறி அழுத மாணவி, அடைக்கப்பட்ட கதவு' - நீட் ஆள்மாறாட்டத்தில் திடுக் திருப்பம்!