தேனி அருகே ரத்தினம் நகரில் உள்ள கருணாகரன் என்பவருக்குச் சொந்தமான கருணா காகிதம், எண்ணெய் ஆலை இயங்குகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் இந்த ஆலையில் தொழிலாளர்கள் நேற்று, இரவு நேரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கொதிகலனில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து தீ பரவியதால் அச்சமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையைவிட்டு வெளியேறத்தொடங்கினர்.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைக்கப் போராடினர். ஆனால் ஆலை முழுவதும் காகிதம் மற்றும் எண்ணெய் இருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இந்தப் பணியில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த தீ விபத்தில் ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்டோர் எந்தவித பெரிய காயமுமின்றி மீட்கப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆலையின் உட்புறத்தில் தீ ஜூவாலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. மேலும், எண்ணெய் ஆலை என்பதாலும் ஆலையில் உள்ள அனைத்துப் பொருட்கள், கட்டடங்கள், இயந்திரங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியது.
தீயைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பிரத்யேக நுரை தெளித்தும் தீயை அணைக்க முடியவில்லை. தொடர்ந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர். இன்று மாலை வரை இந்தப் பணி தொடரும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தென்மண்டல சரக டிஐஜி, தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடியாகச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு, அதற்கானக் காரணங்களை கேட்டறிந்தனர்.
மேலும், இந்த தீ விபத்து நடைபெற்ற ஆலையின் அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் அன்னஞ்சி, ரத்தினம் நகர், சுக்குவிடன்பட்டி உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சுமார் 3 கி.மீ. தள்ளியுள்ள பகுதிகளில் வரை சாம்பல்கள் விழுகின்றன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அல்லிநகரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், கட்டடங்கள் சேதம் அடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.