தேனி: பெரியகுளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கீழ வடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்டப்பகுதியில் 3000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சோத்துப்பாறை அணை மற்றும் கிணற்று நீரைப் பயண்படுத்தி இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு நெல் விளைச்சல் அடைந்துள்ள நிலையில், அறுவடைப்பணிகளையும் கடந்த 20 தினங்களுக்கு முன்பாக விவசாயிகள் தொடங்கினர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த 6 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விளைச்சல் அடைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நெற்கதிர்கள் வயல்வெளிகளில் நீரில் மூழ்கி சேதமடைந்து வருகின்றன. இதனிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மேல்மங்கலம் பகுதியில் விவசாயிகள், அறுவடை செய்த நெல்மணிகள் அனைத்தையும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் பகுதியில் குவித்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் அனைத்தும் மழை நீரால் நனைந்து முளைத்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனைத்தெரிவிக்கின்றனர். மேலும் மழையில் நனைந்து அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளை, நாள்தோறும் வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
அவற்றைத்தொடர்ந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் நிலையில் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருவதால் உடனடியாக மேல்மங்கலம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை, கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டிஏபி உரத்திற்கு மாற்றாக பாஸ்பேட் உரங்களை பயன்படுத்துங்கள் – விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்