தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய், வேளாண், மின்சாரம், தோட்டக்கலை, வனத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பொம்முராஜபுரம், இந்திரா நகர், மஞ்சனூத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு வாகனத்தில் சென்று வருகின்ற பாதைக்கு மேகமலை வன சரணாலயம் தடை விதித்திருந்தது. இதனால், அப்பகுதிகளில் விளைகின்ற காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச்செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற அப்பகுதி விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர்,மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் சச்சின் போஸ்லே ஆகியோர் முன் வைத்தனர். அப்போது விவசாயிகள் தேனி, மதுரை உள்ளிட்ட சந்தைகளுக்கு விளை பொருட்களை உரிய நேரத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது வாரத்திற்கு மூன்று நாட்கள் தேவைப்படும் என்று வேண்டுககோள் விடுத்தனர்.
பின்னர், நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு வாரத்தில் (திங்கள், புதன் ,வெள்ளி) மூன்று தினங்களில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதற்கு மேகமலை வன உயிரிண சரணாலய காப்பாளர் அனுமதி வழங்கினார். மேலும் இந்த வாகன அனுமதி விவசாய தேவைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, வைகை அணை அருகே உள்ள ராஜ்ஶ்ரீ சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான கொள்முதல் விலையை வட்டியுடன் சேர்த்து வழங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உங்கள் வீட்டு வழியாகத்தான் செல்கிறேன்' - முதியவரின் பணத்தை தூக்கிய ஹெல்மெட் திருடன்!