தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது நந்தியாபுரம் கண்மாய். பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி அடைவதுடன், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. இதனிடையே, கடந்த 10 வருடங்களாக கண்மாயில் புதர் மண்டியும், சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் காணப்பட்டன. இதனால் மழை நீரை போதிய அளவில் சேமித்து வைக்க முடியாத நிலை உருவானதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, கண்மாயை தூர்வாரி, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் பல முறை ஆட்சியர் அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விவசாயிகள், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் நந்தியாபுரம் கண்மாய் தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறையினர் நேற்று தொடங்கியுள்ளனர்.இரண்டு ஜே.சி.பி இயந்திரம், கனரக ஹிட்டாச்சி இயந்திரங்களை கொண்டு சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.