கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கூட்டாறு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(62). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இந்துராணி என்ற மனைவியும், அம்பிளிராஜ், ஆதிரா என்ற பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் அம்பிளிராஜிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து கரோனா நோய் பரவலால் விடுதி அடைக்கப்பட்டு வருமானமின்றி இருந்ததால், வங்கிக் கடன் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.
அவரது மகள் ஆதிராவிற்கு தற்போது வயது 25 ஆவதால், அவருக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால், திருமணம் செய்து வைப்பதற்கான பணம் இல்லாத காரணத்தினால், ராஜசேகரன் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகரன், தமிழக - கேரள எல்லைப் பகுதியான இராமக்கல் மெட்டு பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது மகள் ஆதிராவுக்கு போன் செய்து, தான் மன உளைச்சலில் உள்ளதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் தெரிவித்து இணைப்பை துண்டித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஆதிரா, தனது தந்தையின் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக வந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக கூட்டாறு பகுதியிலுள்ள ராஜசேகரனின் உறவினர்களுக்கு போன் செய்து, அவர் தற்கொலை செய்யப்போவதாக கூறிய விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் கேரள மாநில காவல்துறையினருடன் சேர்ந்து இராமக்கல் மெட்டு பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ராஜசேகரன் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு அருகே செல்போனை உடைத்துவிட்டு சுமார் 60 அடி உயர மலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தமிழக – கேரள காவல்துறையினர் இணைந்து ராஜசேகரன் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்பாக நேற்று மாலை இராமக்கல் மெட்டு மலை அடிவாரப் பகுதியில் இறந்த ராஜசேகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடற்கூறாய்விற்காக அவரது உடல் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக கோம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.