தேனி: தேனி - போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் இன்று (டிசம்பர் 2) 120 கி.மீ. வேகத்தில் ரயில் இன்ஜினின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. போடிநாயக்கனூரில் புறப்பட்ட ரயில் இன்ஜின் தேனிக்கு 9 நிமிடங்கள் 20 நொடியில் வந்து சேர்ந்தது.
மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் நிறைவடைந்து, ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. தேனி - போடிநாயக்கனூர் இடையேயான 15 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. ரயில் இன்ஜினை லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் இயக்கினர். ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமானப்பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரிய மூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு போடி ரயில் நிலையத்திற்கு சோதனை ஓட்டத்திற்காக ரயில் வந்ததால், அதனைக்காண 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் ரயில் நிலையத்தில் கூடினர். அதிவேக சோதனை ஓட்டம் என்பதால் ரயில் பாதை அருகே ரயில்வே காவல் துறையினரும், தேனி மாவட்ட காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் நினைவரங்கம்: திறந்து வைத்தார் முதலமைச்சர்