சென்னை: முரட்டு யானை ஒன்று உங்கள் ஊருக்குள் திடீரென புகுந்து ஓடினால் எப்படி இருக்கும். நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா.. இன்று அதிகாலை கம்பம் மக்களின் விடியல், இப்படித்தான் துவங்கியது. கம்பம் நகரின் பிரதான வீதிகளில் வலம் வந்த, கேரள மக்களால் அரிக்கொம்பன் என்றழைக்கப்படும் அரிசிக்கொம்பன் கண்ணில் படுவோரை எல்லாம் துரத்தியது. சில இடங்களில் வாகனங்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.
ஏற்கெனவே கேரளாவில் 10 பேரைக் கொன்ற அரிக்கொம்பனின் நடமாட்டம் கம்பத்தில் ஆவேசமடைந்துள்ளதால், மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க காவல் துறையினர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் வனத்துறையினரின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை குமுளி பகுதியில் நடமாடிய அரிக்கொம்பன் யானை குமுளி மலை வழியாக லோயர்கேம்ப்பிற்கு மதியம் வந்தது. பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் பின்புறம் சென்று கழுதை மேடு புலம் பகுதியில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவு தம்மணம்பட்டி பண்ணை பகுதியில் முகாமிட்ட நிலையில் இரண்டாவது நாளான இன்று கம்பம் நகருக்குள் புகுந்தது.
யானையை பிடிக்கும் நடவடிக்கை குறித்து தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி விடுத்துள்ள உத்தரவில், “கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்து பெரியார் புலிகள் காப்பகத்திற்கு (அதாவது கேரளா-தமிழக எல்லைக்கு அருகில்) தற்போது "அரிக்கொம்பன்" என்ற காட்டு யானை இடம் பெயர்ந்துள்ளது. கம்பம் நகருக்குள் நுழைந்து பீதியையும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டையும் உருவாக்கி உள்ளது.
இதனால் மனித உயிர்களுக்கு காயம் அல்லது உயிரிழப்பு மற்றும் சொத்து சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வட்டத்திற்கு அருகே கும்கி யானைகளின் உதவியுடன் மயக்க ஊசியை பயன்படுத்தி பிடிக்கவும், இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
மேலும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, பிரிவின் படி விலங்குகளை பிடிக்க வேண்டிய விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், நன்கு பயிற்சி பெற்ற 3 பேரை ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, “ பொள்ளாச்சியின் டாப்சிலிப் முகாமிலிருந்து கால்நடை மருத்துவர்கள் மற்றும் மீட்பு குழுவினருடன் கும்கி யானைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் முதன்மை வனப் பாதுகாவலர் கும்கி யானைகளை சரியாக கண்காணிக்கவும், மறு உத்தரவு வரும் வரை யானைகளைப் பராமரிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972, பிரிவு 48-A-ன்படி பிடிக்கப்பட்ட யானையை, மேகமலை கோட்டத்தின் வருசநாடு பள்ளத்தாக்கில் உள்ள வெள்ளைமலையின் ஆழமான வனப் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்.
யானையை பிடித்த பிறகு விரிவான அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளுடன் அனுப்பப்பட வேண்டும்” என ஊர் மக்கள் மற்றும் யானைக்கும் எந்த வித அசம்பாவித செயல்கள் நிகழாத வண்ணம் பிடித்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மனித-விலங்கு மோதல் குறிப்பாக யானை மற்றும் மனித மோதல் குறித்து வன விலங்கு ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து விலங்குகள் ஆர்வலரான கொ. அசோகா சக்கரவர்த்தி, , நம்மிடம் கூறுகையில், "காடுகளில் யானைகளுக்கான இருப்பிடம் குறைந்து வருகிறது. இதனால் அவைகளுக்கான உணவும் குறைந்து வருகிறது. எனவே யானைகள் உணவை தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகிறது. அரசு இதனை கவனத்தில் எடுத்து கொண்டு காடுகளை பாதுகாத்து மனித-விலங்கு மோதல்களை தடுக்க வேண்டும்.
இந்த நிகழ்வை பொறுத்தவரை, 'அரிக்கொம்பன்' யானை கேரளாவில் ஏற்கனவே மனிதர்களை தாக்கியதால் அதனை தூரத்தில் கொண்டு சென்று அடர்ந்த காட்டு பகுதியில் விட்டிருக்க வேண்டும். தற்போதாவது மனிதர்களுக்கும் யானைக்கும் எந்த தீங்கு நேராத படி அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நம்மிடம் பிரத்தியேகமாக கூறுகையில், "அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அதே நேரத்தில் அரிக்கொம்பனை பிடிக்கும் வரை மக்கள் யாரும் அநாவசியமாக வெளியில் வரவேண்டாம்” எனத் தெரிவித்தார். இந்த அரிக்கொம்பன் யானை கேரள மாநிலத்தில் இதுவரை 10 பேரை தாக்கி கொன்றுள்ளது. இதனால் இந்த யானையை, கடந்த மாதம் மயக்க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்த பின்பு அதனை தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயத்தில் வனத்துறையினர் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரிசி கொம்பனால் கம்பத்தில் 144 தடை... பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட 2 கும்கிகள்...