தேனி: போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப் பள்ளி. இந்த ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் தொடக்கப் பள்ளி நகரின் காய்கறி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது.
அதில், எல்கேஜி, யுகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 200 சிறுவர், சிறுமிகள் இந்த பள்ளி வளாகத்தில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நுழைவு வாயில் முன்புறமே இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கொட்டும் குப்பைகள், காய்கறி மார்க்கெட்டில் அழுகி வீணாகும் காய்கறிகள் மற்றும் இறைச்சி கழிவுகள் மொத்தமாக இங்கு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதானால் அந்த குப்பைகள் அழுகி அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால் இந்த பள்ளி வளாகத்தில் பயிலும் மழலை குழந்தைகள் காலரா, மலேரியா மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசு நிதி உதவி பெறும் நிர்வாகம் சார்ந்த பள்ளி என்பதால் இங்கு முன்புறம் கொட்டப்படும் குப்பைகள் குறித்து பல முறை புகார் அளித்தும் போடி நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பள்ளி அருகிலேயே 200 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.
இங்கும் தினசரி வழிபாட்டிற்காகவும், விசேஷ நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பல இடங்களில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் மொத்தமாக இங்கு கொட்டப்பட்டு நகராட்சி வாகனங்களில் அள்ளிச் செல்லப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருவதோடு மட்டுமின்றி கிருமிகளும் அதிக அளவில் பரவி வருகின்றது.
இப்பகுதியில் செல்லும் பள்ளி குழந்தைகள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு தொற்றுகளுக்கும், சுவாச பிரச்சனைக்கும் ஆளாகி வருகின்றனர். இந்த குப்பை மேடு அருகிலேயே பள்ளி வளாகம் முன்பு செயல்பட்டு வரும் தின்பண்ட கடைகளில் ஈ மற்றும் கொசுக்கள் வைத்து வரும் தின்பண்டங்களை குழந்தைகள் உண்ண வேண்டிய சூழலை நிலவுவதால் பல்வேறு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே நகராட்சி சுகாதார துறை முறையாக நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட சுகாதாரபகுதியாக மாற்றி குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வேண்டும் என்று பெற்றோர்களும், ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?