தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் பொதுத்தேர்தலுடன் சேர்த்து சட்ட மன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தால் கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படையினர் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காட்ரோடு பகுதியில் பாலாஜி தலைமையிலான நிலையான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனி நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்றை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட வெள்ளிப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றைக் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட வெள்ளிப்பொருட்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருமான வரித்துறை அலுவலர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், சேலம் கரிகாலன் தெருவை சேர்ந்த மொத்த வியாபாரி நிஜாம் என்பவருக்குச் சொந்தமான வெள்ளிப்பொருட்களை அவரின் மேலாளர் சாருக் என்பவர் விற்பனைக்காக தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்தது தெரியவந்தது. எனவே, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைத்ததும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுச் செல்லுமாறு அலுவலர்கள் தெரிவித்தனர்.