தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (60). இவர், தனது இரு சக்கர வாகனத்தில் இன்று (பிப்.20) தேனி – பெரியகுளம் சாலையில் டி.கள்ளிப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி பேருந்து அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில் மினி பேருந்து சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே சுப்ரமணி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதியவரின் உறவினர்கள், விபத்திற்கு காரணமான மினி பேருந்தின் ஓட்டுநரை கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மினி பேருந்து ஓட்டுநர் தென்கரை காவல் நிலையத்தில் சரண் அடைந்ததாகத் தெரிவித்ததை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து சுப்ரமணியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்விற்காகப் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து தொடர்பாக, தென்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போராட்டத்தால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.