தேனி: உத்தமபாளையத்தில் நடந்த திமுக தேர்தல் பரப்புரையில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, “மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள்; திமுக ஆட்சி மலரும். துணை முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தேனி வட்டார மக்களின் ஏராளமான கோரிக்கைகளை தீர்க்காமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வருகிறார்.
அவருக்கு 2 முறை முதலமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவிற்கும் உண்மையாக இல்லை. 3ஆவது முறையாக முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவிற்கும் உண்மையாக இல்லை. தற்போது முதலமைச்சராக உள்ள பழனிசாமிக்கும் உண்மையாக இல்லை.
அயோத்திக்கு கிடைத்த பரதனை போல, தமிழ்நாட்டிற்கு கிடைத்தவர் ஓபிஎஸ் என ஊரை ஏமாற்றுவதற்காக விளம்பரம் செய்கிறார். பரதன், அயோத்தி என சொன்னால் பாஜவுக்கு புரியும் என்பதற்காக இப்படி விளம்பரம் செய்கிறார். இதனை பக்தர்களே ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா மரணத்தின் போது பன்னீர்செல்வம், பழனிசாமி, சசிகலா, தினகரன் ஒன்றாகதானே இருந்தார்கள்.
அவரின் சந்தேகத்திற்கிடமான மரணத்தில் என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியாதா? இப்போது பிரிந்து வந்துவிட்டதால் பாவத்தில் பங்கு இல்லை என்று ஆகிவிடுமா? இதுவரை எதுவும் செய்யாத பன்னீர்செல்வம், இனியும் தேர்தலில் வெற்றிபெற்று என்ன செய்யப்போகிறார்? அதற்கு வீட்டிலேயே சும்மா இருக்கட்டும் என மக்கள் பாடம் கற்பிக்கும் தேர்தலாக இது இருக்கும்.
பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ரூ.17 லட்சத்து 44 ஆயிரமாக இருந்தது. அதுவே 2006ஆம் ஆண்டு சமயத்தில் ஒரு கோடியே 77 லட்சமாக உயர்ந்தது என குற்றச்சாட்டு வழக்கு தொடரப்பட்டது. இப்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனை விசாரிக்க திமுக வழக்கு போட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுக.,வின் கைப்பாவையாக உள்ளது. இதனால் திமுக ஆட்சிக்கு வந்தப்பின் பன்னீர்செல்வத்தின் சொத்துக்குவிப்பு குறித்து உறுதியாக விசாரிக்கப்படும்.
இந்த ஊழல் முகத்தை மறைக்கவே பரதன் வேஷம் போட்டுள்ளார். இனி எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும். திமுக.,வினரின் வெற்றி மக்களின் வெற்றியாக அமையும். மார்ச் 14ஆம் தேதி திமுகவின் 11ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெறும்” என்று கூறினார்.