கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் பிறப்பித்துள்ள நிலையில், தனி நபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மா உணவகம், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார்.
அம்மா உணவகத்தில் ஆட்சியர் உணவு சாப்பிட்டு எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பின்னர், கம்பம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சை பிரிவு, தனி சிகிச்சை பிரிவு ஆகியவை குறித்தும் மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கூடலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். இவர்கள் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டுவதற்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன் மகாராஷ்டிராவில் இருந்து இரண்டு குழுக்களாக 103 பேர் தேனி மாவட்டத்திற்கு வந்தனர்.
ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 71 பேரை மட்டும் குள்ளப்புரத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிறுவனத்தினர் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைக்கப் பெற்றது. இதற்காக தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 32 தொழிலாளர்கள் ஓரிரு நாட்களில் அனுப்ப உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு: ட்ரோன் கேமரா மூலம் திருவாரூரை கண்காணிக்கும் காவல் துறை!