தேனி: பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள், நாராயணசாமி - சுமித்ரா தம்பதி. இவர்களது ஒரே மகள் மதுமிதா (26). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மகளின் மருத்துவப் படிப்பு மற்றும் புதிதாக வீடு கட்ட வாங்கிய கடன் என மொத்தம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் மதுமிதாவின் தந்தை, கடந்த ஓராண்டிற்கும் மேலாக வேலைக்கு ஏதும் செல்லாத நிலையில் தொடர்ந்து மது அருந்தி வந்ததாகவும், இதனால் தாய் - தந்தை இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மதுமிதா பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளார். மேலும் தாய் சுமித்ரா, சர்க்கரை நோய் மாத்திரைகளை அதிகளவு எடுத்துள்ளார். இவ்வாறு தாய் மற்றும் மகளின் தற்கொலை முயற்சியை அறிந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமித்ரா தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவருடைய தற்கொலைக்கு காரணம் மதுமிதாவின் தந்தை மற்றும் தந்தையின் உறவினர்கள் என எழுதிய கடிதம் சிக்கியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு.. இளம்பெண் விபரீத முடிவு!