தேனி: போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (ஏப்.6) வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இடங்களை தேனி எம்.பியும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் பார்வையிட சென்றார்.
போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாளகவுண்பட்டி கிராமத்திற்குச் சென்ற ரவீந்திரநாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் எம்.பியுடன் சென்ற அதிமுகவினரும் அவர்களுடன் பதில் வாக்குவாதம் செய்ததால் இருபிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் கற்களை எடுத்து வீசி தாக்கிக்கொண்டதில் எம்.பி., ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இதில் நல்வாய்ப்பாக ரவீந்திரநாத்திற்கு ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே எம்.பியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இருபதுக்கும் மேற்பட்ட திமுகவினரின் மேல் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த இயந்திரத்தில் கோளாறு!